சிவவாக்கியர் வரலாறு

 

18 சித்தர்களில் ஒருவராக அறியப்படும் சிவவாக்கியர் திருமழிசை ஆழ்வார் ஆகவும் இருக்கலாம் என்ற ஐயம் தோன்றுகிறது

ஏனென்றால் இவர் திருமழிசை என்னும் ஊரில் அத்திரி, பிருகு, வசிஸ்டர் முதலான முனிவர்களுடன் வசித்துவந்த பார்க்கவ மகா முனிவருடைய பத்தினிக்கு 12 மாதம் கர்ப்பத்தில் தங்கிய ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிண்டம் போல் அழகற்று இருந்தமையால் அவளது பத்தினியும் அக்குழந்தையை ஒரு பிரம்பு புதரின் அடியில் போட்டுவிட்டு சென்றனர்.

தனியே கிடந்த குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. அழுகை குரலைக் கேட்ட சிவபெருமான் தனது மனைவி பார்வதி தேவியுடன் தோன்றி அக்குழந்தையின் பசியை தீர்த்து அதற்கு காட்சியும் கொடுத்துவிட்டு மறைந்தார்.

அச்சமயத்தில் பிள்ளைப்பேறு இல்லாத திருவாளன் என்னும் வேடன் அவ்வழியே வந்தான். அக்குழந்தையை கையில் அள்ளி எடுத்து தன்னுடைய மனைவியின் கையில் கொடுத்தான். உடனே, அவள் குழந்தையை மார்போடு அணைத்து உச்சி மோந்து முத்தம் மிடவே, அவளுடைய இரண்டு கொங்கைகளிலும் பாலானது ஊற்று போல் சுரந்தது. அவள் பாலை குழந்தைக்கு ஊட்ட ஊட்ட அது உண்ணாமலையே பேரழகுடன் திகழ்ந்தது.

இங்கனம் பல நாட்கள் செல்ல, தந்தையாகிய திருவாளன் தனக்கு கிடைத்த அறிய பெரும் புதையலாக கிடைத்த அக்குழந்தைக்கு சில ஜோதிட வல்லுனர்களை கொண்டு திருமழிசையில் பிறந்தமையால் அக்குழந்தைக்கு "திருமழிசையான்" என்னும் பெயரிட்டான். பின்னர் அவருக்கு திருமழிசை ஆழ்வார் என்னும் பெயர் வழங்கி வந்தது.

இங்கனம் சில ஆண்டுகள் கழிந்தன. தமிழ் வளர்த்து வந்த திருவாளன் வைணவ சமயத்தை சார்ந்து இருந்தபடியால் திருமழிசை ஆழ்வாரும் வைணவ சமயத்தில் இணைந்து சில பாசுரங்களைப் பாடினார். பின்னர் சைவ சமயத்திற்கு மாறினார் அங்கன மாறியபின் எந்நேரமும் சிவபெருமானையே சிந்தையில் நிறுத்தினார். இவர் தாம் எழுதிய பாடல்களில் ஏறக்குறைய 50 பாடல்களில் சிவ சிவ என கையாண்டு இருப்பதால் இவர் சிவவாக்கியர் என்னும் திருப்பெயரை பெற்றார்.


இவர் இயற்றிய பாடல்கள் சிவவாக்கியம் என இவருடைய பெயராலேயே வழங்கப்படுகிறது சிவவாக்கியம் மொத்தம் "ஆயிரத்து 12" பாடல்களாகும் மேலும் இவருடைய பாடல்களில் ராமனையும் புகழ்ந்து பாடியுள்ளார் அந்த பாடல்கள் தான் இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சைவராக மாறி இருப்பதற்கான சான்று. சிலர் சிவவாக்கியர் வேறு, திருமழிசை ஆழ்வார் வேறு என்று கூறுகின்றனர் இக்கூற்று நடுநிலையில் நின்று ஆராயத் தக்கதாகும்.

"நாடி பரிட்சை" என்று ஒரு நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

சிறந்த பாடல்களை எழுதி மக்களிடத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சிவவாக்கியர் இறுதியில் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது. இன்னும் பௌர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் அவரின் சமாதிக்கு பூசை நடைபெற்று வருகிறது.












கருத்துகள்