சிவவாக்கியர்

"ஓடியோடி ஓடியோடி உட்கலந்த ஜோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே!"


சிவவாக்கியர். 18 சித்தர்களில் திருமூலருக்கு அடுத்தபடி கருத்து செறிவுள்ள பாடல்களை பாடிய பெருமை கொண்டவர் நமது சிவவாக்கியர். இவர் அந்தக் காலத்தில் ஒரு நாத்திகவாதி போலவே அறியப்படுகிறார்.

மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும் போலி சாமியார்கள் தீண்டாமை கொடுமை அழுக்குடன் திரியும் மனிதர்கள் போன்றவர்களை கடுமையாக சாடுகிறார்.

உருவ வழிபாட்டில் இவருக்கு சுத்தமாக நம்பிக்கையே கிடையாது.

மனமாசு அகற்றாமல் காலையிலும் மாலையிலும் நீரில் மூழ்கி இறைவனை வழிபடுவதால் யாதொரு பயனும் இல்லை. அவ்வாறு செய்பவர்கள் மூடர்களே ஆவார்கள். தண்ணீரிலேயே மூழ்கிக் கிடக்கும் தேரை மீன்கள் போன்றவைகள் முக்தி அடைகிறதா என்று கேள்வி கணைகளை தொடுக்கிறார் இவரது பாடல்களில்.

" காலை மாலை நீரில் மூழ்கும் அந்த மூடர்கள் காலைமாலை நீரிலே கிடந்த தேரை என்பெறம் காலமே எழுந்திருந்து கண்கண் மூன்றில் ஒன்றினால் மூலமே நினைப்பி ராகில் முத்தி சித்தி ஆகுமே!

தேனினும் இனிய பாடல் அல்லவா இது!


பசுவின் மடியில்  கறந்தபால் மீண்டும் போய் மடியில் புகாது அதுபோலவே கடைந்தெடுத்த வெண்ணையும் மீண்டும் போய் மோருக்குள் புகாது. சங்கு உடைந்து அதனுள் இருந்து வெளிவரும் உயிர் மீண்டும் சங்குக்கு உள் போய் தங்காது. மரத்திலிருந்து உதிர்ந்த பூவும் காயும் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக் கொள்ளாது இவை எல்லாம் எப்படி சாத்தியமில்லையோ அது போலவே மனித உடலை விட்டு பிரிந்து போன உயிரும் எத்தனை பேர் கதறி அழுதாலும் அந்த உயிர் மீண்டும் உடலில் வந்து புகாது. எனவே உயிரோடு இருக்கும் வரை இறைவனை நினையுங்கள் என்கிறார் சிவவாக்கியர்.

"கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா 

உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா 

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா 

இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லையே!"













கருத்துகள்